Monday, September 15, 2014

ஆபிச்சுவரியில் என் பெயர்......


“ராத்திரி பதினோரு மணி வரைக்கும் ஹிந்து ஆபிஸு திறந்து இருக்கும். போனா ஆபிச்சுரி எடுத்துப்பாங்க”. பக்கத்து வீட்டு சன்முகம் வந்து சொன்னபோது மலைப்பாக இருந்த்து. கிழக்கு தாம்பரத்திலிருந்து மௌண்ட் ரோடு வரை காரை ஓட்டிக்கொண்டு போய் வர வேண்டும். அதுவரை தருமாவை யார் பார்த்துக்கொள்வது? மணி பார்த்தேன் மாலை 7:30. மகேஷுக்கு போன் செய்து சொன்னேன். “அப்பா இன்னிக்கு சண்டே. இங்க இப்பதான் விடிஞ்சுருக்கு. நான் ஃப்ளைட்டு பிடிக்க எப்படியும் இரண்டு நாளாயிடும். என்ன செய்ய போறீங்க?எனக்கு உதவிக்கு வருவான் என்று பார்த்தால் என்னிடமே கேள்வி கேட்கிறான். “சரிப்பா. உன்னால எப்ப வரமுடியுமோ வா. ஆனா அம்மாவ நான் வெச்சுக்க முடியாது. உங்க ஊரு மாதிரி ஒரு வாரம் கழிச்சு ஃப்யுனரல் பன்ற வசதியெல்லாம் இங்க கெடயாது.போனை வைத்துவிட்டேன். ஒரே பையன். அமெரிக்காவில் வாசம். தாயின் மரணத்தின் போதும் வர முடியாத நிலமை. சரி. நான் தானே “நல்லா படி. அமெரிக்கா போ”. என்று அவனை விரட்டினேன்?
வாசலில் வந்து பார்த்தேன். 230 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு. அவனவன் ஏழரை மணிக்குள் வந்து, “பாவம் நல்ல மாதிரி. நல்ல ஆத்மா. அதான் யாருக்கும் ஒரு தொந்தரவும் குடுக்காம போயிட்டா. ச் ச் ச்”, என்று என் கையை பிடித்து ஆறுதல் சொல்வதாக நிணைத்துக்கொண்டு பேசி சென்றுவிட்டார்கள். திங்கள் கிழமைகளில் துக்கம் விசாரிக்க கூடாதாம். கடைசியாக வந்த சண்முகமும் எல்லா விவரமும் இங்க இருக்கு என்று ஒரு சிறு காகிதத்தை டெலிபோனுக்கடியில் வைத்துவிட்டு சென்று விட்டார்.
இப்படி ஒரு ஞாயிற்று கிழமை மாலை இவள் இறந்து போவாள் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. 72 வயதில் அவளும் 83 மூன்று வயதில் நானும் தனிக்குடித்தனம் பார்த்து வந்தோம். கடந்த 3 வருடங்களாக, வாரம் இருமுறை டயாலிஸிஸ் செய்வதற்காக இவளை அழைத்துக்கொண்டு தேணாம்பேட்டை அப்பொல்லோ போய் வந்துக்கொண்டிருந்தேன். இன்று ஏழு மணிக்கு அவளுக்கு பாலை குடுத்துவிட்டு ஹாலில் டிவி பாக்க உட்கார்ந்த பொழுதுதான், வேலைக்காரி “அய்யா அம்மா பாலைக் குடிக்க மாட்டேங்கறாங்கஎன்று குரல் குடுக்க, வழக்கம்போலவே எரிச்சலுடன் வந்து பார்த்தேன். கண்கள் சொருகி வாய்க் கோணிக்கொண்டு தருமா படுத்திருந்தாள். தொட்டுப்பார்த்தால் உடல் சில்லிட்டு போயிருந்தது. பயத்தில் ஆம்புலன்ஸ்சுக்கு போன் செய்து விட்டு காத்திருந்தேன். அவர்கள் 15 நிமிடத்தில் வந்து அவள் இறந்துவிட்டதை உறுதி செய்தனர். அந்த 15 நிமிடங்களும் அவள் மரணத்தை ஆவலோடுதான் எதிர்பார்த்திருந்தேன். கடந்த சில மாதங்களாக அவளைப் பார்த்துகொள்ள நான் பட்ட பாடு எந்க்குத்தானேத் தெரியும்? எங்கே அவர்கள் வந்து தருமாவை ஆஸ்ப்பத்திரிக்கு அழைத்துப் போய் ஒரு வாரத்தில் தேற்றி கொண்டு வந்து விடுவார்களோ என்று பயந்திருந்தேன். நல்ல வேளை வந்தவுடனேயே தருமா இறந்து விட்டதை உறுதிசெய்து விட்டார்கள்.
டெலிபோன் அடித்தது. வாத்தியார்தான். “சொல்லுங்கோ”, “கார்த்தால ஒன்பதரை மணிக்கு மேல ஆரம்பிச்சுடலாம். நாளைக்கு நல்ல முஹூர்த்தம். நானும் ஒரு கல்யாணம் ஒத்துண்டிருக்கேன். இங்க வந்துட்டு அங்கே போப்படாது பாருங்கோ? சரியா? மாமிய தெற்குப் பாத்து படுக்க போடுங்கோ. ஃப்ரீஸர் எதுவும் வேண்டாம். ஏஸி இருந்தா போதும். பூமி சம்மந்தம் வேணும் இல்லையா. மகேஷ் வரானா?பேசிக்கொண்டே போனார். “மகேஷ் வரலை”. “சரி பரவாயில்லை நீங்களே எல்லாத்தையும் பண்ணிடலாம்”. போனை வைத்தேன். யாரை கூப்பிட்டு தருமாவ தெற்க்குப் பக்கமாக திருப்புவது? எது தெற்கு? ஒரே ஆளாக முடியுமா. ம்ஹூம். அசைக்க முடியாது என்று தோன்றியது. வேலக்காரி இல்லை. மணி ஒன்பது.
வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினேன். கீழே கார் இருந்தது. போன முறை பி.பி. செக் செய்துவிட்டு டாக்டர் இனிமேல் கார் ஓட்ட வேண்டாம் என்றார். அதானால் தருமாவை ஒரு ஆட்டோவில் தான் அழைத்துக்கொண்டு போய்வருவது வழக்கம். இப்போது மணியாகி விட்ட்து. இந்த நேரத்தில் ஆட்டோ கிடைப்பது கடிணம். காரை ஸ்டார்ட் செய்து வாசலுக்கு வந்தேன். செக்யூரிட்டி ஓடி வந்து கதவை திறந்தான். நேபாளி. இவனிடம் என்ன சொல்வது? அவன் சல்யூட்டை தாண்டிக் காரை ஓட்டி சென்றேன்.
1956ல் திருமணம். தருமா என்கின்ற தருமாம்பாள் 18 வயதில் எனக்கு வாக்கப்பட்டு வந்தாள். நல்ல விதமாக பி.யூ.சி முடித்தவளுக்கு கொஞ்ச காலம் வரன் எதுவும் அமையவில்லை. அப்போதுதான் நான் அவள் பெற்றோர் கண்ணில் பட, அரசாங்க உத்யோகஸ்த்தனான என்னை அவர்கள் தருமாவின் கையில் பிடித்துக்கொடுத்தார்கள். திருமணம் முடிந்து ஒரு வாரத்தில் அம்மா குடித்தணம் அமைக்க வந்திருந்தாள். ஒரு ஞாயிற்று கிழமை காலையில் தருமா கீரை மசியலும் ரசமும் செய்திருக்க, பசியுடன் இருந்த நான் அதை இலையில் போட்டுக்கொண்டேன். நறநறவென பல்லில் மணல் தட்டுப்பட்டது. “தருமா”, ஓங்கி குரல் குடுக்க பதட்ட்த்துடன் வந்தாள். “என்னங்க?” “என்னவா? கீரையில் ஒரே மண்ணு”. நன்னா அலம்பினேனே?” “அலம்பினியா? இந்தா இத சாப்பிட்டு பாரு.” “ஏங்க எனக்கு ஒன்னும் தெரியலயே?” “அப்படியா? இந்தா, இந்த கீரை மொத்தத்தையும் நீதான் இன்னிக்கு சாப்பிடனும்.அம்மா, வேண்டாண்டா அதுதான் நன்னாயில்லையே, அவள சாப்பிட சொல்லி ஏன் கட்டாயப்படுத்தறே?என்று சொல்லியும் கேட்காமல் அவளையே சாப்பிட வைத்தேன். அது முதல் நான் ஒரு மூர்க்கனாகவே பார்க்கப்பட்டேன். மாமனார் வீட்டிலும் நல்லவர் ஆனா ரொம்ப கோபக்காரர்”, என்ற பெயர் நிலைத்துவிட்ட்து. இது ஒருவகையில் எனக்கும் சௌகரியமாகவே போயிற்று. அவள் வீட்டிலிருந்து யாரும் வருவதேயில்லை.
சப்வே தாண்டி ஜி.எஸ்.டி ரோடில் திரும்பினேன். யாருமில்லாமல் தனியாக நான் மட்டுமே வண்டி ஓட்டிக்கொண்டிருந்த மாதிரி இருந்த்து. பழைய ஃபியட். ஏஸி இல்லாத்தால் வியர்த்தது. இன்னும் எத்தனை கிலோமீட்டர்? க்ரோம்பேட்டையைத் தாண்டி போய்க்கொண்டிருக்கிறேன். பல்லாவரம் அப்புறம் கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, ஜெமினி, தேவி த்யேட்டர் ஐயோ இன்னும் எத்தனை தூரம்?
10 வருடங்கள் கழித்து அந்த நாளும் வந்தது. தருமா கர்ப்பமானாள் அதுவரைக்கும் என் சுடு சொற்களிலிருந்து அம்மாதான் அவளை காப்பாற்றி வந்தாள். மாப்பிள்ளை, தருமா மாசமாயிருக்கா. டெலிவரிக்கு அவளை நாங்க கூட்டிட்டுப் போறதுதான் முறை.....” “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நானும் எங்க அம்மாவுமே பாத்துக்கறோம். அங்கே அவ்வளவு சுத்தம் போறாது.ஒன்றும் பேசாமல் என் மாமனாரும் மாமியாரும் கிளம்பி போனார்கள். அம்மா என் முடிவை ஆதரிக்கவில்லை. ஆனால் என் வாய்க்கு பயந்து அவளும் ஒன்றும் பேசவில்லை. மகேஷ் பிறந்தான். “உங்கப்பா அம்மா வந்து பாக்கட்டும் ஆனா இங்கயே இருந்து உனக்கு அத பன்னனும் இத பன்னனும்னு ஒரவாட வேண்டாம்”. ”எப்படீங்க முடியும்? அவங்களுக்கு நான் ஒரே பொண்ணு. ஏதாவது பன்னனும்னு ஆசபடமாட்டாங்களா?பளீர் என்று ஒரு அறை. பொறி கலங்கியது. பச்சையுடம்புக்காரி என்றும் பார்க்கவில்லை. “ஒன்னு தெரிஞ்சுக்கோ. இந்த வீட்ல நா மட்டுந்தான் பேசுவேன். எதிர்த்து பேசினா எனக்குப் பிடிக்காது. அது முதல் தருமா தனக்கு என்ன வேண்டும் எது வேண்டும் என்று கேட்பதையே தவிர்த்துவிட்டாள்.
பல்லாவரம் வந்துவிட்டேன். சே! என்னடா இது? தனியாக, யாருமில்லாமல் இந்த வயதில் வண்டியை ஓட்டிக்கொண்டு, யாருக்காக ஆபிச்சுவரி தருவதற்காக போய்க்கொண்டிருக்கிறேன்? திரும்பிவிடலாமா? மணி 9:45. இன்னும் அரை மணியில் அங்கே இருந்துவிட்டால் பரவாயில்லை. மனதின் வேகத்திற்க்கு வண்டியின் வேகம் இணையாக இருக்கவில்லை.
அப்பா எனக்கு இஞ்ஜிணியரிங் சேரவேண்டாம்பா. அம்மா சொல்லுமா”. “வேண்டாம் மகேஷ். அப்பா எப்படி சொல்றாரோ அப்படியே கேட்டுடு. எதிர்த்து பேசினா அவருக்குப் பிடிக்காது. மகேஷ் என் முகத்தையே பார்த்தான். “இங்க பார். இன்னிக்கு இஞ்ஜிணியரிங் படிச்சாத்தான் நல்லது. இங்கே ஒன்னும் ஃப்யூச்சர் கிடையாது. அமெரிக்கா போயிடு. “வேண்டாம்பா. எனக்கு பூனே ஃபிலிம் இன்ஸ்டிட்ல சேர்ந்து ஃபோட்டோக்ராபி படிக்கனும்பா. ப்ளீஸ்பா. சே! எப்படிடா இப்படியெல்லாம் உனக்குத் தோணறது.? ஃபோட்டோக்ராபிப் படிச்சுட்டு? சினிமால சேரப்போறியா. உன் புத்தி கெட்டுபோச்சா? போ! ஒழுங்கா இஞ்சிணியரிங்க் சேர்ற வழியப் பாரு. மகேஷ் படித்தான். வேலைக்குப் போனான். அமெரிக்காவும் போனான். திருமணமாகும் வரை மாதத்தில் ஒரு முறயாவது பேசுபவன் அதற்கு பிறகு எப்பொழுதாவது பேசுவான். இங்கு வரும்போது கூட பெங்களூருவிலிருக்கும் அவன் மாமனார் வீட்டிலிறங்கி, ஒரு சனிக்கிழமை காலையில் வந்துவிட்டு ஞாயிறு மாலை கிளம்பிவிடுவான். அவன் மனைவி குழந்தையை அழைத்து வருவதைத் தவிர்த்தான். அப்படி ஒரு தரம் வந்த பொழுதுதான் அவன் தருமாவிடம் பேசிக்கொண்டிருந்த்தைக் கேட்டேன். அம்மா உன்ன வேணும்னா கூட்டிட்டுப் போறேன். அவருக்கும் எனக்கும் ஒத்து வராது.
ஏர்போர்ட் ஃப்ளைஒவர் மீது ஏறினேன். அடுத்து கத்திபாரா. இன்னும் எத்தனை நேரம் பிடிக்கும் ஹிந்து ஆபீஸ் போய் சேர?
என்னங்க. எனக்கு கார்த்தாலேர்ந்து என்னமோ மயக்கமா இருக்கு. டாக்டர் கிட்ட கூட்டிட்டு போறேளா? 15 வருடங்களுக்கு முன் ஒரு காலை பொழுதில் கேட்டாள். சாயங்காலமா போலாம். போனோம். டெஸ்ட் எல்லாம் எடுக்கணும் காலைல வாங்க. வெறும் வயத்துல வரணும். தண்ணிக்கூட சாப்பிட கூடாது. ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் எல்லாம் பன்ணணும்”. செய்தோம். சர்க்கரை நோய் என்பது உறுதி செய்யப்பட்ட்து. தபாரு உனக்கு டயபடீஸ் இருக்குங்கறதால என் சோத்துல மண்ணள்ளிப் போட்டுடாதே. நீ என்ன வேணும்னா சமைச்சுக்கோ. எனக்கு எப்பவும் போல எல்லாம் சாதாரணமா இருக்கணும்.சரியென்று தலையசைத்தாள். இரண்டு சமையல் செய்யவெல்லாம் நேரமில்லாமல், உடம்பும் ஈடு கொடுக்காமல் 12 வருடங்களாக ஒரே மாதிரியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் என்பது மூன்று வருடங்களுக்கு முன் 2 கிட்ணியும் செயல்லிழந்ததாக டாக்டர்கள் சொன்னபோதுதான் தெரிய வந்தது. மகேஷ் உடனே வந்தான். “நீ கொஞ்ம் கேர் எடுத்துண்டிருக்கலாம்பா.நா என்னடா செய்யறது? இவ இப்படி பத்தியமா சாப்பிடமா உடம்பக் கெடுத்துப்பான்னு கணவு கண்டேனா?மகேஷ் என்னை பூச்சி போல பார்த்தான். நிறைய பணம் செலவாகுமென்று செக் எழுத போனவனை தடுத்தேன். “வேண்டாண்டா. நா ரிடயர்ட் கவர்மெண்ட் சர்வண்ட். எனக்கு ரியெம்பர்ஸ்மெண்ட் கிடைக்கும். டோண்ட் பாதர்.மருமகளும் என்னை கேவலமாகப் பார்த்தாள். எனக்கு யார் தயவும் தேவையில்லை.
அண்ணா போஸ்ட் ஆபிஸ் வந்துவிட்டது. நேரே போய் இடதுபுறம் உள்ள கேட்டில் நுழைந்தேன். 10:20. சார் இங்கே பார்க் பண்ணுங்க.ஆபிச்சுவரி?“நேரா போய் ரைட்ல ஒரு லைட் எரியுது பாருங்க. அங்கே உள்ளே போனா டைம் ஆபீஸ். அங்கேதான் குடுக்கணும்.நேராக போய் வலது புறம் திரும்பினேன். “வாங்க. உக்காருங்க”, அவஸ்த்தையாக இருந்தது. என்னமோ கல்யாண வீட்டில் அழைப்பது போல அழைக்கிறான்? மையமாக பார்த்தேன். கவுண்ட்டரின் அந்தப்புறம் இருவர் இருந்தனர். ஒருவன் வேகவேகமாக ஒரு ரிஜிஸ்ட்டரில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தான். இந்தப்பக்கம் 3 பேர் காத்திருந்தனர். “சார் குடுங்க சார்”. நான் எழுதிக்கொண்டு போயிருந்ததைக் குடுத்தேன். “8 செண்டிமீட்டர்னா பதினொராயிரத்தி நானூரு ரூபா ஆகும் சார்ஃபோட்டோ இருக்கா. சரி”. பின்னாடி இருந்தவன் “சாருது டைரெக்ட்னு போடுப்பா. இதெல்லாம் ஏஜன்சி.என்னுடையதை எடுத்துக்கொண்டு ஒருவன் போனான். “சார் வைய்ட் பண்ணுங்க. ப்ரூஃப் பாத்துட்டு பே பண்ணிக்கலாம்வேர்த்தது.  சாய்ந்து உட்கார்ந்தேன். “இது எங்க நம்பர் சார், நானும் குறித்துக் கொண்டேன் இனிமேல் இது தேவையா என்று யோசிக்காமல்.
நேரம் 10:40. எப்போது ப்ரூஃப் ரெடியாகுமோ?   ‘ஃப்ரீஸ்ர் பாக்ஸ் ஆர்டர் செய்திருக்கலாமோ? மெலிதாக நெடியெதுவும் பரவுமா? “சார் தருமாங்கறது யாரு சார், என்று கூவியபடி ஒருவன் வந்தான். “என்னோடதுதான், எழுந்து நிற்க முயற்சித்தேன். அவனே அருகில் வந்து, “உக்காருங்க சார். இந்தாங்க ப்ரூஃப், என்றான். வாங்கினேன், “குடுக்கறவங்க பேரு......., என்று இழுத்தேன். “கீழே இருக்கு சார். தர்மாம்பாள் வயது....டிக் செய்தேன். அவனிடம் திருப்பிக்கொடுத்தபடி, “இந்த பேர் இன்னும் கொஞ்சம் பெரிசா வர மாதிரி செஞ்சுடுங்களேன், என்றேன் என் பெயரைக் காட்டி. அவன் என்னை ஒரு மாதிரிப் பார்த்தபடி, “சரி சார், என்று போனான்.

நான் இறந்து போனால் மகேஷ் ஆபிச்சுவரி குடுப்பானா? இதை யார்ப் பார்க்கப் போகிறார்கள்?

Saturday, November 30, 2013

சிறு கதை...


இரண்டு கப் ஐஸ்க்ரீம்.....






அந்தத் தொலைப்பேசி அழைப்பு வந்திருக்கவேகூடாது என்று இப்போதும் நினைக்கிறேன். “சார் ஃப்ரீயா?” என்று கேட்டாள். ஹம்ம்ம்ம் ஃப்ரீ தான் என்று சொன்னது எவ்வளவு தப்பு என்று இப்போதும் யோசிக்கிறேன்.



இரவு பத்தரைக்கு அழைத்தவளை நான் ஏன்தான் போய் பார்த்தேனோ? ஒரு ஐஸ்க்ரீமுடன் அந்த சந்திப்பு முடிந்துவிடும் என்று எதிர்ப்பார்த்தேன். உங்கள் புன்னகைக்கு அர்த்தம் எனக்குத் தெரியும். ஆனால் சத்தியமாக அவ்வளவே எதிர்ப்பார்த்துப் போனேன்,

நான் ஒரு விளம்பரப் பட இயக்குநன். இரண்டு நாட்களாக இவள் என்னுடைய விளம்பரப் படமொன்றில் நடித்து வந்தாள். கதாநாயகியாக நடித்தவளின் அருகில் நிற்கும் பலரில் ஒருவள்தான். ஆனால் பிழையில்லா ஆங்கிலத்தில் பேசினாள். கண்டிப்பாக அவளுக்குப்பின்னால் ஒரு கதையிருந்ததாக நான் நம்பினேன். அவள் வெகு இயல்பாக வந்து என் கைப்பேசி எண்ணைக்கேட்டபோது நான் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல்தான் கொடுத்தேன். ஏனென்றால் நான் வேலை செய்யும் விதம் அப்படி. யாருக்கும் எளிதில் என்னைப் பிடித்துவிடும், பலர் அதில் கவரப்பட்டு கேட்பார்கள். சில நாட்களில் அவர்களும் மறந்துவிடுவார்கள் நானும் மறந்து விடுவேன். அதேபோல் வேலை பளுவால்  மறந்துவிட்டேன். அவள் அழைத்தபோது யாரென்று தெரியாமல் கேட்டேன். அவள் மிகவும் சிரமப்பட்டுத் தன்னை நிணைவூட்டினாள். அவள் யாரென்றுத் தெரிந்தவுடன் என்னால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல் கிளம்பி விட்டேன்.

இதோ பெங்களூரின் மெல்லிய குளிரை ரசித்த படி அவளெதிரே ஒரு ஐஸ்க்ரீம் பார்லரில் அமர்ந்திருக்கிறேன் அவள் பேசுவதை கண்கொட்டாமல் பார்த்தபடி.. அப்படி ஒரு ஆங்கிலத்தை நான் கேட்டு ரொம்ப நாள் ஆகியிருந்தது. வேறெதுவும் வேண்டாம், ஒரு ஃரூட் சாலட் ஐஸ்க்ரீம் போதுமென்றாள். நானும் ஆர்டர் செய்த்தேன். வேறு என்ன வேண்டுமென்பது போலப் பார்த்தேன். அதோ அங்கே தெரிகிறதே அந்தத் தெருவில் நடப்போமா என்று கேட்டாள். நான் அந்தத் தெருவைப்பார்த்தேன். யாரும் இல்லாமல் காலியாக இருந்ததது. வெகு நேரம் யோசித்தேன். கவலப்படாதீர்கள் உங்களை நான் “ரேப்” செய்துவிட மாட்டேன் என்றாள். ஐஸ்க்ரீம் வந்தது.

ஒவ்வொரு கரண்டியாக அதை சாப்பிட ஆரம்பித்தோம். நான் அவளை அளவிட ஆரம்பித்தேன். துளிர் வெற்றிலைப்போல இருந்தாள். “எப்போது பிறந்தாய்?” அவள், “சில நூறு வருடங்கள் முன்பே பிறந்துவிட்டேன். உனக்காக காத்திருந்தேன்.” “போதும் நிஜத்தை சொல்லு”.  சொன்னாள். என் மகனைவிட இரண்டே வயது பெரியவள். ஒரு முறை ஊரில் இருக்கும் மனைவி மற்றும் மகனின் முகங்கள் வந்து போயின.  நான் செய்வது நியாயமா? சுற்றிலும் ஒரு முறைப் பார்த்தேன். எல்லோரும் என்னையேப் பார்ப்பது போல இருந்தது. கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது, கொஞ்சம் குற்ற உணர்ச்சியும் இருந்தது. அவள் முடிக்கும்வரை நான் காத்திருந்தேன்.

மிகவும் மெதுவாக அவள் சாப்பிடுவது என் பொறுமையை சோதிப்பதாக இருந்தது. ஆனாலும் அவளின் அருகாமை எதையும் பொறுத்துக்கொள்ள செய்யும் என்று தோன்றியது. என்ன என்பது போலப் பார்த்தாள். ஒன்றுமில்லையென்று தலையாட்டினேன். என்னைக் கடந்துப் போன சர்வர் என்னைப் பார்த்தப் பார்வையில் கிண்டல் இருந்தது. நான் அவனையும் தாண்டி வெளியில் பார்ப்பதுப்போல பாவனை செய்தேன். சாலை மிகவும் காலியாக இருந்தது. “இங்கே ஒருத்தி உனக்காக உன்னையே பார்த்துக்கொண்டிருக்கேன் அங்கே யாரை சைட் அடிக்கிறாய்?”, திடுக்கிட்டுத் திரும்பினேன். அவள் அழகாக சிரித்துக்கொண்டு, ஐஸ்கீரீம் கரண்டியை வாயில் கடித்தப்படி என்னைப் பார்த்தாள். இபோதுதான் அவள் உடையை கவனித்தேன். பள்ளி செல்லும் சிறுமியர் அணியும் பிணோஃபார்ம் போன்றதொரு உடை அணிந்திருந்தாள்.

சற்றே கீழே இறங்கிய உடை.. ஐஸ்க்ரீம் சாப்பிட்டவாறே என்னிடம்தான் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள். அவள் பேசும்போது அவள் காதுகளிலிருந்த தொங்கட்டான்களும் ஆடின. மனைவி மற்றும் மகனின் முகங்கள் நினைவில் வந்தன. தலையை அசைத்து அவற்றைக் கலைத்தேன். மீண்டும் மீண்டும் சபலப்பேய்.  நேரம் கடந்துக்கொண்டிருந்தது. சர்வர் ஒரு தோல் புத்தகத்தில் பில்லைக்கொண்டு வந்து வைத்தான். நான் உடனே அதைப் புரட்டி எத்தனையென்று பார்த்தேன். அவள் கடைசி கரண்டி ஐஸ்க்ரீமை வழித்து வாயில் வைத்தப்படி என் கையைப்பிடித்தாள். மீண்டும் சபலப்பேய். ச்சே! “நான் கொடுக்கிறேனே, ப்ளீஸ்”. எந்த பதிலை சொன்னாலும் கையை எடுத்துவிடுவாள். பதிலே பேசாமல் பர்ஸைத் திறந்து பணத்தை வைத்தேன். எவ்வளவென்று கூடப் பார்க்கவில்லை. “போலாமா?”. எழுந்து நின்றேன். அவளும் எழுந்தாள். அவளை கேட்கவில்லை நேராக எதிரில் இருந்த அந்தத் தெருவில் நடக்க ஆரம்பித்தேன். என் முதுகில் அவள் குறும்பாக புன்னகைப்பதை உணர்ந்தேன். நல்ல வேளை சுற்றிலும் யாருமில்லை.

கொஞ்சம் பதற்றமும் கொஞ்சம் எதிர்ப்பார்புடனும் நான் நடந்தேன். அவள் சற்றே வேகமாக நடந்து வந்து என்னுடன் சேர்ந்துக கொண்டாள். “இங்கே என்ன நடைப்போட்டியா நடக்கிறது? ஏன் இவ்வளவு வேகம்?” எனக்கு வெட்கமாக இருந்தது. நிதானித்துக்கொண்டேன். “கடவுளுக்கு நன்றி”. “எதற்கு?” “என் கோரிக்கையை ஏற்று இந்த நேரத்தில் இங்கே வந்ததற்கு”. “ஹ்ம்ம்ம்ம்”. மிகவும் பலகீனமாக உணர்ந்தேன். “சார்”, “ஹ்ம்ம்ம்ம்ம்”, திரும்பி அவளைப் பார்த்தேன். “உங்கள் கையைப் பற்றிக்கொண்டு நடக்கட்டுமா? கொஞ்ச தூரம் மட்டுமே. ப்ளீஸ்.” அதே கடைந்தெடுத்த ஆங்கிலம். அவள் கண்களைப் பார்த்தேன். எதையும் புரிந்துக்கொள்ள முடியவில்லை. “ப்ளீஸ்” சுற்றிலும் பார்த்தேன். யாரும் தென்படவில்லை. கையை நீட்டினேன். உள்ளங்கைய கோர்த்துக்கொள்வாள் என்று எதிர்ப்பார்த்தேன். ஆனால் அவளோ தன் கையை என் கையுடன் சுற்றி, மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு நடக்க முற்பட்டாள். திடுக்கிட்டு சுற்றிலும் பார்த்தேன், தூரத்தில் யாரோ நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். அவள் என்னை இழுத்த இழுப்பில் எல்லாம் மறந்து நடந்தேன். பதின்ம வயதில் கிடைக்காத அனுபவம். பதற்றம் குறைந்து குதூகலம் நிறைந்திருந்தது.. அவளுடலின் வெப்பம் எனக்கும் பரவ ஆரம்பித்திருந்தது. என் நடையின் வேகம் குறைந்திருந்தது. அதை உணர்ந்தபோது கொஞ்சம் வெட்கமாக இருந்தது. குளிர் விட்டிருந்தது.

"எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது.", அவள். "நீ என் மகனைவிட இரண்டு வயதே மூத்தவள். தெரியுமா", நான். "அதனாலென்ன?", அவள். இபோது அவளை திரும்பிப் பார்த்தேன். அவள் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தாள். அவளைப் படித்துவிடும் என் முயற்சியை அவள் கணித்திருக்க வேண்டும். "எப்படிப்பட்டவள் இவள் என்று தானே யோசிக்கிறீர்கள்?" "சேச்சே. அதெல்லாம் இல்லை". "நான் நல்லவள்தான். என் அன்பை வெளிப்படுத்த எனக்கு உரிமையில்லையா என்ன? வயதில் மூத்தவரென்பதால் காதல் வரக்கூடாதா?" இருபதாண்டுகால மணவாழ்க்கை இதுவரை ஒருபோதும் இவ்வாறு பேசியிராத மனைவி. தொடர்ந்தாள் "எனக்கொரு ஆசை". "உன் ஆசையெல்லாம் மிகவும் விபரீதமாகவேயிருக்கிறது". "இதுவும் அதேதான்". "சொல்லு". "உங்களை முத்தமிட விரும்புகிறேன்". திடுக்கிட்டு நின்றேன். தெருவின் இருபுறமும் யாருமில்லை.

தூரத்தில் ஒரு இரு சக்கர வாகனம் வேகமாகத் திரும்பியது. அவள் கையை விடுவித்துக்கொள்ள முயற்சித்தேன். அவள் பிடியை இன்னும் அதிகமாக்கினாள். அப்போதுதான் கவனித்தேன் வந்தது ஒரு வண்டியல்ல. இரண்டு மூன்று பேர், இளைஞர்கள் ஐந்தாறு வண்டிகளில் வந்துக்கொண்டிருந்தார்கள். பெங்களூரின் குளிரிலும் எனக்கு வேர்த்தது. அவள் என்னைப் பிடித்துக் கொள்ளும் முயற்சியில் என்னை அதிகமாக அணைத்துக்கொண்டிருந்தாள்.

அவளின்பிடி அதிகமாக என் காது நுனி சூடாகிக்கொண்டிருந்தது. மெத்தென்ற அவளுடைய உடலின் ஸ்பரிசம், மெல்லிய அவளின் வாசனைத் திரவியத்தின் மணம் எல்லாம் எனக்கு வந்துக்கொண்டிருக்கும் ஆபத்தை மறக்கடித்துக் கொண்டிருந்தது. அந்த இளைஞர்களுக்கும் எங்களுக்குமான இடைவெளி குறைந்து கொண்டேவந்தது. “முத்தமிடட்டுமா”, திடுகிட்டுத் திரும்பினேன். “என்ன விளையாடுகிறாயா? அங்கே பார். அவர்கள் நம்மைப் பார்க்க மாட்டார்களா?”, “அப்படியென்றால் அவர்கள் பார்ப்பது தான் உங்கள் பிரச்சினை. முத்தமிடுவதில் அல்ல.” சே! எப்படிப்பட்ட பெண். தைரியசாலியா இல்லை திமிர் பிடித்தவளா? இல்லை முட்டாளா? “உங்களுக்கு கூச்சமாக இருந்தால் அதோ அந்த வேனின் பின்னால் போய்விடலாம்” இழுத்தாள். நானும் சென்றேன். இதென்ன இவளின் இழுப்புக்கெல்லாம் நான் போகிறேனே என்ற யோசனையும், வந்து கொண்டிருக்கும் அவர்கள் எங்களைப் பார்த்துவிடுவார்களோ என்ற பதட்டமுமாக தொடர்ந்தேன். வேனின் பின்னால் நாங்கள் மறையவும் அந்த பைக் இளைஞர்கள் எங்களை கடப்பதற்கும் சரியாக இருந்தது. ஆனாலும் அவர்கள் எங்களைப் பார்த்தவாறு சென்றது எனக்குத் தெரிந்தது. அவள் இழுத்த வேகத்தில் நான் அவள் மேல் மோதினேன். அப்படியே அவள் என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

எல்லாத் தயக்கங்களும் என்னை விட்டு விலகின. என் கைகள் தாமகவே அவளை அணைத்துக்கொண்டன. வேனின் மறைவுத் தந்த தைரியத்தில் சற்று வேகமாகவே எங்கள் மத்தியிலிருந்த இடைவெளி குறைந்தது. இருவரின் மூச்சுக் காற்றும் நொடிக்கு நொடி சூடாவதை உணர்ந்தோம். அவள் தன் கால்களை ஊன்றி எக்கி என் முகத்துடன் முகம் வைத்துக்கொள்ள முயற்சித்தாள். நானும் அவளின் உயரத்திற்கேற்ப என்னை தளர்த்திக்கொண்டேன். அவள் தலையை உயர்த்தி என்னை கன்னத்தில் முத்தமிட்டாள். அவளின் அடுத்த செயல் என்னை எல்லாவற்றையும் மறக்க செய்தது. கன்னத்தைவிட்டு அவள் என் உதட்டுக்கு மாறினாள். என் கைகளை இழுத்து அவளை சுற்றிக் கட்டி கொண்டாள். எனக்கு தைரியம் சற்று அதிகமாக என் பிடியை இறுக்கினேன். அவளுடைய உடையினுள்ளே என் கைகளை நுழைத்து அவளுடைய மிருதுவான சருமத்தை உணர்ந்தேன். இது நியாயமா இல்லையா என்ற தர்க்கமெல்லாம் இப்போது ஏற்படவில்லை. மனசாட்சி என்னை விட்டு விலகிவிட்டதாக உணர்ந்தேன். அவளுடைய உடலின் அருகாமை போதாதவன் போல அவளை மேலும் மேலும் இறுக்கிக்கொண்டேன். அவள் என்க்குள் கரைந்துவிடுபவள் போல இன்னும் அதிகமாக என்னை இறுக்கிக்கொண்டாள். நேரம் கடப்பது எங்கள் இருவரின் இதயத்துடிப்பில் கேட்டது.

ஏதோ ஒரு மின்னலில் என் மனைவி மற்றும் மகனின் முகங்கள் மீண்டும் நினைவுக்கு வந்தன. விலுக்கென்று அவளை உதறிவிட்டு விலகி நின்றேன்.

அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்து, ”என்ன ஆச்சு”, “ஒன்றுமில்லைப் போகலாம்” என்றேன். வேகமாக நடக்கவும் செய்தேன். சே! என்ன மனுஷன் நான். ஏன் இப்படி நடந்து கொண்டேன். கழிவிரக்கம் என்னை வாட்டியது. ஓட்டமும் நடையுமாக என் பின்னால் வந்தவள் மீண்டும் என் கைகளைப் பிடித்துக் கொள்ள முற்பட்டாள். நான் அவளை மெல்ல விலக்கினேன். “ஏன்?”, “ஒன்றுமில்லை. நேரமாகிறது.” அவளைப் பார்த்தேன் கண்கள் கலங்கியிருந்தன. “நானாக வந்ததால் என்னைத் தப்பாக நினைத்து விட்டீர்கள். இல்லையா?” “சேச்சே! அதெல்லாமில்லை.” “இல்லை நீங்கள் என்னைத் தப்பாகத்தான் நினைத்துவிட்டீர்கள்” அவள் நின்று விட்டிருந்தாள். எனக்கு தர்மசங்கடமாக இருந்தது.

அவளருகில் போனேன். “அழாதே. நேரமாகிவிட்டதே காரணம். அங்கே பார். நாம் சாப்பிட்ட ஐஸ்க்ரீம் பார்லரைக் கூட மூடிவிட்டார்கள். நீயும் வெகு தூரம் போகவேண்டியவள். அதனால்தான் சொல்கிறேன்.” அவள் சமாதானமடைந்தவள் போல் தெரியவில்லை. நான் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டேன். “நிஜமாவா? டு யு லவ் மீ?”, “யா பேபி ஐ லவ் யு”. “சரி அப்படியென்றால் ஒரு ஹக்”, “இங்கேயா”, “ஆமாம்” எனக்கு என்ன செய்வதென்று தெரியாது நின்று கொண்டிருந்தேன். அவள் என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள். “போதுமா?” “ம்ம்ம்ம்ம் இன்னும் கொஞ்ச நேரம்”. “போதும்”. அவளை விலக்கினேன். வேண்டா வெறுப்பாக விலகினாள்.

மெதுவாக நடந்தோம். மீண்டும் என் கைகளைப் பற்றியவாறு நடந்தாள். இந்த முறை அவளை நான் விலக்கவில்லை. அந்த ஐஸ்க்ரீம் பார்லரைத் தாண்டி அவளுடைய ஸ்கூட்டர் நிறுத்தியிருந்த இடத்தை அடைந்தோம். “மீண்டும் எப்போது?”, இவள் கிளம்பினால் போதுமென்றிருந்தது. “பார்க்கலாம்”. “சோ மீன் யு ஆர்”. அவளுடைய கோபம் எனக்கு சிரிப்பை வரவழைத்தது. சிரிக்கலாமென்று நான் வாயைத் திறந்தபோது அந்த ஐஸ்க்ரீம் பார்லரின் சர்வர் எங்களை கடந்து சென்றான். நான், “சரி நீ கிளம்பு”.  சடெக்கென்று வண்டியை கிளப்பியவள், என் கழுத்தை வளைத்து என் உதட்டில் ஒரு முத்தத்தை பதித்துவிட்டு போனாள்.

நான் சிரித்துவாறு அவள் சென்ற திசையை சற்று நேரம் பார்த்துவிட்டு, என் காரை நோக்கி வந்தேன். அப்போதும் அதே சர்வர் என்னைப் பார்த்தவாறு கடந்தான். என்ன நிணைத்திருப்பான் என்னைப் பற்றி. வயதானவனுக்கு வந்தது வாழ்வென்றா? அப்படி எனகேன்ன வயதாகிவிட்டது? இந்த டிசம்பருக்கு 46. பல்லிருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான். யார் சொன்னது இது? யாரோ சொன்னது. அந்த சர்வர் எங்கேயென்று பார்தேன். தூரத்தில் யாருடனோ அவன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். என்னை நோக்கி அவனுடைய நண்பனிடம் அவன் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். என் அதிஷ்டத்தைப் பற்றி சிலாகித்து கொண்டிருக்கக் கூடும் அல்லது நான் கொடுத்த தாரளமான டிப்ஸைப் பற்றி கூறுகிறானோ என்னவோ. நான் காரைக் கிளப்பினேன்.

நான் போன பின் அவர்கள் பேசிக்கொண்டது என்க்குக் கேட்கவில்லை. உங்களுக்குக் கேட்டதா?

சர்வர்-2: ஏன் அவனையே பார்த்து கொண்டிருக்கிறாய். சாவு கிராக்கி டிப்ஸ் தரலையா?

சர்வர்-1: டிப்ஸெல்லாம் நிறையவே கொடுத்தான்.

சர்வர்-2: பின்னே .ஃபிகரத் தள்ளிக்கிட்டு வந்திருந்தானா?

சர்வர்-1: தனியாத்தான் வந்திருந்தான். ஆனா ரெண்டு ஐஸ்க்ரீம் வாங்கினான். ஒண்ணைத் திங்கவேயில்ல. ரெண்டுத்துக்கும் காசுக் குடுத்துட்டு ஒண்ணைத் திங்கவேயில்ல.